கல்யாணமுன்னு பேச்சு எடுத்ததுமே எனக்கு மனசுக்குள்ளே
ஏதோ ஒரு சந்தோசம். கல்யாண பேச்சு ஆரம்பிச்ச ஒரு வாரத்துலயே எனக்கு ஒடம்பு
ஒரு சுத்து பெருத்துப் போனது போலத்தான் தெரியுது. ஏன்னா எனக்கு 30
வயசாகியும் கல்யாணம் ஆகல்ல... அதுக்குக் காரணம் இருந்துச்சு.
எங்க வீட்டுல ஆறுபேரு நான் ஒருத்தன் மட்டும் ஆம்பள...
மீதி அஞ்சும் பொம்பள. ரண்டு அக்கா, மூணு தங்கச்சிங்க. நான் நாலாம்
வகுப்புக்கு மேல படிக்க முடியல.
''நான் ஒருத்தன் கடலுக்குப்போய் சம்பாதிச்சு அஞ்சு
கொமுரையும் கட்டிக் கொடுக்கவும், இவன படிக்க வக்கவும் என்னால முடியாது...
அதுனால இவனயும் இப்பவே கடலுக்கு வந்து என் கூட தொழிலு பழவச் சொல்லு''
அம்மாவிடம் அப்பா கராறா சொல்லிட்டாரு.
"அம்மா நான் படிக்கிறேன் அம்மா... இன்னும் ஒரு வருசம்
படிச்சா நான் வாத்தியார் ஆயிடுவேன். அப்ப நான் வேலைக்குப் போய் அக்கா
தங்கச்சிய கல்யாணம் பண்ணிக் குடுக்கிறேன். ஒங்கலயும் ஒக்கார வச்சு சோறு
போடுதேன்''. நான் அம்மாவிடம் கெஞ்சினேன்.
"ஆமாமா... வக்கத்த வாத்தியாரு வேலையில வாற சம்பளத்த
வச்சு கெழங்கு துண்டுகூட வாங்க முடியாது... மாசம் முடிஞ்சா கெடச்சுத
சம்பளத்த முழுக்க எண்ணியெண்ணி செலவழிச்ச நம்மால முடியாது".
அப்பா ஒரேயடியாகச் சொல்லிட்டாரு" போக்கத்தவன்
போலீசு...வாக்காத்தவன் வாத்தியாரு"-ன்னு எங ஊருல பழமொழி சொல்லுவாங்க. அத
வச்சுதான் எங்க அப்பனும் எனக்கு படிப்ப நிறுத்திட்டு அவருகூட கட்டுமரத்துல
தொழிலுக்கு கொண்டு போயிட்டாரு.
தொடக்கத்துல கடலுதண்ணியும், காத்தும்வாடையும்
ஒத்துக்காம சர்த்தலு வந்தாலும் போகப்போக அது சரியாகிவிட்டது. இப்ப எங்க
ஊருல நாந்தான் பெரிய தொழிலாளி.
"அவன் ஒரு கடல் அளும்பதான். இந்த பிராயத்திலயே இப்படி
தொழிலுக்குப் போற ஒருத்தன நான் இருவரைக்கும் பாக்கல..." எங்க ஊருல நெறயபேரு
என்னப்பத்தி இப்பிடிதான் சொல்லுவாங்க.
ராத்திரி படுவாட்டு மரம் தள்ளி காலைல அடஞ்சிட்டு,
பரபரா கச்சாவலைய எழக்கி பெருவாரியான நொத்தோலி பாச்சிட்டு வந்திட்டு அத
ஒதறக் கூட செய்யாம, றாள் வலையில ஏறிப்போய் றாள் பாச்சிட்டு வருவேன்.
அதுக்கு பெறவு கரமடில வேளாபட்டதுன்னு வேளம் கேட்டா மடி வளச்ச போயிடுவேன்.
அதனால நெறயபேரு என்மேல காய்மகாரப்பட்டு,
"அவனா அவன் ஒரு ஆயிரம் தொளவ"- என்ரு பட்டபேரு வச்சு கூப்பிடுவாங்க.
இப்பிடி சம்பாதிச்சு ரண்டு அக்காமாரையும் கல்யாணம்
கட்டி குடுத்திட்டு... எனக்குப் பொறவு மூணு தங்கச்சிகளையும் கல்யாணம் கட்டி
குடுத்திட்டு..
அதுக்குப் பெறவுதான் எனக்கு கல்யாணப் பேச்சையே எடுத்தாங்க...எனக்க அக்கா
பொண்ணு இப்ப கல்யாண பிராயத்துல இருக்கா.
கல்யான பேச்சு எடுத்ததுமே... எனக்க அக்கா, தங்கச்சி,
அவுங்க மாப்பிளைமாரு, பிள்ளைங்க,சொந்தபந்தம் எல்லாருமே எங்க வீட்டுல வந்து
தங்கிட்டாங்க. தெனமும் பண்டார வேருபானையில நாட்டரிசி சோறு வேவும். எப்பவும்
அடுப்பு எரிஞ்சிட்டுதான் இருக்கும். எங்கம்மா நாருபெட்டியில இருக்க அரிசிய
சொளவுல போட்டு பெடச்சி பானையில தட்டுத அழக பாத்திட்டே இருக்கும்.
நெருங்குன சொந்தக்காரங்களையெல்லாம் அப்பபோய் கூப்பிடுவாங்க..... அதுல ஒரு ஆளு வராட்டாலும் ரண்டு தடவ மூணு தடவ போய் கூப்பிடுவாங்க.
எல்லரும் வந்து இனிப்பு கிண்டுனாங்க.
''பொண்ணு வீட்டுலதானே இனிப்பு கிண்டி, பாச்சோறு
பொங்கி, மாவு உருண்ட அவுச்சி, இடிமாவு பொட்டு, அச்சுமுறுக்கு-
பணியாரமெல்லாம் சுட்டு மணவறையில் வச்சவாவு... நம்ம மாப்பிள்ளை வீடு
நமக்கெதுக்கு இனிப்பு கிண்டணும்" நான் மனசுக்குள் நெனைப்பேன்.
ஆனா எல்லா குடும்பகாரங்களும் ஒண்ணா சேந்து
கருப்பட்டிய உருக்கி பைனியாக்கி தேங்காய திருவி பால் பிழிஞ்சு, அரிசிய
இடிச்சி மாவாக்கி பெரிய மூணுகல்ல ஃ வடிவத்துல அடுப்பாக்கி, அதுல இனிப்பு
கிண்டுத பெரிய சட்டுவத்த ஏத்திவச்சு ஒவ்வொண்ணாப் போட்டு, பெரிய வெறவு
கட்டையில தீவச்சு சட்டாப்பையால நாலுபக்கமும் நாலுபேரு காட்டியாகி... அதுல
ஒரு வெத்திலய போட்டு ஒட்டிபாத்து... ஒட்டாத ஒடன" நல்ல பருவமப்பா..." என்று
தலையில கட்டிய தொவர்த்த எடுத்து தண்ணிய வடிஞ்சு ஓடுத வெசர்ப்ப தொறச்சிட்டு
ஈக்கார பெட்டியில இருக்க வெத்தில பாக்க எடுத்து சவித்து துப்புறதுல இருக்க
சந்தோசம் எங்கயாவது கெடச்சுமா...
கிண்டிய இனிப்புத் துண்டங்கள் எல்லாரோட வீட்டுலயும் போவும். அப்பிடி பங்குபோட்டு தின்னுவாங்க.
ஒவ்வொரு நாளு ராத்திரியும் எல்லா வீட்டுலேயிருந்தும்
ஆளுங்க எங்கவீட்டு முன்னால கூடிடுவாங்க...எங்க வீட்டு முத்தத்துல பெரிய
ஓலப்பந்தல் போட்டு ஒவ்வொரு மொளயிலயும் ஒரு அரைக்கான் வெளக்க
வச்சிருப்ப்போம். ஒவ்வொரு வெளக்குக்கீழயும் ஒரு கூட்டம் ஒக்காந்து பாட்டும்
கச்சேரியுமா கல்யாண வீடு அமர்க்களப்படும்.
" குருவான கள்ளன்
வீட்டுலே
ஒண்ணாங்கள்ளன் களவுசெஞ்சான்
நானில்ல.. வேறயார்
அஞ்சாங்கள்ளன்"
ஒரு கூட்டம் கள்ளன் வெளயாட்டு வெளையாடும்.
"சாளையில சொல்லு..."
"நாச்சாளையா, பேச்சாலையா, தெண்டஞ் சாலையா,
மக்ரூணிசாலையா,பறவசாளையா..." என்று எதிரணியில் இருக்கிறவன் மனசுல நெனச்ச
சாளைக்க பேர சொல்றதுவர நூத்துக்கணக்கில் பேரு சொல்லுறதும் அதுபோல
"நொத்தொலியில சொல்லு...''
"நொத்தொலியில, வெந்நொத்தோலியா,
கருநொத்தோலியா,வாலுநீண்டாங்கரு நொத்தோலியா, மட்ட நொத்தோலியா..." அதுலயும்
நூத்துக்கணக்கில் சொல்லி வெளயாடுறதும் பாக்கும்போது உலகத்துல உள்ள எல்லா
சந்தோசமும் எங்க வீட்டு முத்தத்துல கொட்டிக் கிடக்கிறதுபோல இருக்கும்.
"நீல கருணாகரனே நடராசா
நீலக்கண்டனே
"சப்பக்கோ ...னக்...கோ..
வருண... க்கோ...னே...
சப்பக்...க்கோ...னக்..கோ..
போட்டிப்பாடல்கள் களைகட்டும்.
ஞாயிற்றுக்கிழமயோட எனக்கு மூணுபற வாசிச்சு
முடிஞ்சது... செலரு ரண்டு பற வாசிப்பாங்க ரண்டு பற வாசிப்பாங்க. ரண்டு பற
வாசிக்கணுமின்னா ஒருபற மன்னிக்கனும். ஒரு பற மன்னிகிகற அதிகாரம் சின்ன
ஆண்டவரு சாமியருக்குத்தான் உண்டு... செலரு ஒரு பற மட்டும்
வாசிப்பாங்க...ஒரு பற வாசிக்கணும்னா ரண்டு பற மன்னிக்கணும். ரண்டு பற
மன்னிக்கிற அதிகாரம் மேட்ராணி ஆண்டவருக்குதான் உண்டு... இந்த அலச்சல்
எதுக்குன்னு நெனச்சு நாங்க மூணுபறையும் கோயில வாசிக்கச் சொன்னோம் ஒவ்வொரு
பறைக்கும் மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் ஒரு கோடி உடுப்பு கெடச்சும்.
அப்பாடா...கல்யாணம் நாளும் வந்தாச்சு... முந்தினநாள் எங்க வீட்டுல ஊர முச்சூடும் கூட்டி ஒரு பெரிய விருந்து நடந்தது.
''மாப்பிள்ளைக்கு மொக அலங்காரம் செய்ய
நேரமாகிவிட்டதால் அழைக்கப்பட்ட உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும்
மாப்பிள்ளை வீட்டில் வந்து சேருமாறு கேட்டுக் கொள்கிறோம்" மெலிஞ்சியார்
மணியடித்துக் கொண்டு ஊர்முழுக்க தெருத்ருவா பறை வச்சிட்டு போவாரு.
என்னை சோடிச்சி கொலுவுல கொண்டு வச்சிக்ருக்காங்க.
"அம்மா அப்பா சிலுவபொடுவாங்க.."
"வலத்தப்பா வளத்தம்மா சிலுவபோடுங்க..."
"சகோதர சகோதரி, மாமன் மச்சான் வாங்க"
உறவுக்காரஙள்லாம் சிலுவ போட்ட பிறகு காரிஸ்தான கூப்பிட்டு, முசுக்க உளி,
பொக்கிச பெட்டிய கூப்பிட்டு, மொயலாளிய கூப்பிட்டு எல்லோரையும்
கூப்பிட்டுக்கொக்ண்டு வந்து நிறுத்தினர்.
"நா புடுச்சிட்டு வாற மீன வாங்கிட்டுப்போய் வித்துண்டுவந்து காசு குடுக்கிற துலுக்கன் எனக்கு எப்படி மொதலளி''ன்னு கேட்டிருக்கேன்.
" என்ன இருந்தாலும் அவரு நமக்கு படி அளக்கிறவரு.. அவர மொயலாளின்னுதான் கூப்பிடணும்" அப்பா சொல்லுவார்.
எல்லோரும் வந்து சந்தனப்பொட்டு வச்ச பெறகு மூக்குமுட்ட விருந்து சாப்பிட்டு... வாழை இலையில கட்டி வீட்டுக்கும் எடுத்திட்டு போவாங்க.
எனக்க கல்யாணத்துக்கு வந்தவங்களுக்கு ஆளுக்கு ஒரு
பக்கா அவுலு, நாலு பாளையங்கோட்டை பழம் கருப்பட்டி பைனி,துருவின
தேங்காய்,.... ஒரே கொண்டாட்டம்தான் தின்னுமட்டும் தின்னுட்டு,
மிச்சமிருந்ததை தான்வீட்டுக்கு எடுத்திட்டு போனாங்க. இது போக விருந்து
முடிஞ்ச பிறகு ஒவ்வொரு விட்டுக்கும் ஒரு ஈக்கார பெட்டி நெறய அவுளும் பழமும்
குடுத்து விட்டங.... அவுலில பழத்த உரிச்சு போட்டு, கூடவே கருப்பிட்டி
பைனிய ஊத்தி தேங்காயும் திருவிபோட்டு வெரவி பெசஞ்சு தின்ன இருக்கிற ருசி
இருக்கே... தேனாமிர்தம் தான்.
விடியகாலம் பொழுது ரண்டு தொளவைக்கு மேல நிக்கும்ப
எல்லாரும் புத்தந்துணி உடுத்தி எங்க வீட்டுக்கு கொழந்த குட்டிகளோட
வந்திட்டங்க. எங்க வீட்டில் இருந்த சொந்தக்காரங்களும் நான் எடுத்துக்
கொடுத்த கோடி துணியக்கட்டி கெளம்ப தயாராயிட்டாங்க. நானும் மாப்பிள்ள வேசம்
போட்டு முடிஞ்சாச்சு. எல்லாரும் வந்து அந்த அரிக்கன் விளக்கின் மங்கலான
வெளிச்சத்துல எனக்க நெத்தியில குருசு போட்டுட்டு போனாங்க.
"சரி...சரி இப்பமே கெளம்புனாதான் உச்சைக்கு மின்ன போய் சேர முடியும்... கெளம்புங்க கெளம்புங்க..."
அப்பா எல்லாரையும் வெரட்டினாரு... அவரு மாப்பிளைக்க அப்பா இல்லியா அந்த தோரணைய காட்டியாவணுமே!
" லே... எங அந்த கொட்டும், உத்தியலுகாரனுவல காணல்ல... இன்னும்
ஒறங்குதானுவளா... அஞ்சு சக்கரத்த முழுப்பா வாங்கிட்டு இன்னும் ஒறக்கமோ"
அப்பா சொல்லி முடிப்பதற்குள்
டும்...டும்...டும்...
பிப்...பிப்..பி...பீ...
கொட்டுகாரனும், ஊத்தியலுகாரனும் தொடங்கியாச்சு மேளத்த...
எல்லாரும் கடவுளை பிரார்த்தனை செஞ்சிட்டு கெளம்பினோம்.
பயங்கர கூட்டம் கடக்கரை வழியா கல்யாண ஊர்வலம் கனஜோரா
நடந்தது. நெறய துரம் நடக்கிறதுனால... கைக்குழந்தைகல தூக்கிட்டு வாற
பெண்களுக்கு ஒத்தாசையா இளந்தாரிமாரு... பச்சை குழந்தைகள மாத்தி மாத்தி
தூக்கிட்டு வந்தாங்க.
"ல... அங்க பாருல...ஒரு கரமடி இழுக்க முடியாம நடுவழியில நிக்குது... பெருவாரி மீனுபட்டிருக்கு போல..."
நானும் அப்பதான் பார்த்தேன். அந்த கரமடில கம்பாலுக்கு
நாப்பது பேரு இருப்பாங்க... எல்லாரும் பெலங்கொண்ட மட்டும் இழுத்தும் மடி
ஒரு 'இன்ச்' கூட நவுழாம அப்படியே நிக்குது.அதப்பாத்துட்டு என்னால
போவமுடியல...கையில இருந்த பூமாலைய என் தங்கச்சி கையில குடுத்திட்டு...
கல்யாண பட்டுவேட்டிய மடிச்சு கட்டிட்டு ஒரு கம்பால பொய் புடுச்சு
இழுத்தேன்.
"போடு...ஐலசா..."
"மாப்பிள்ளையே மடிவளச்ச போயிட்டான். நாமளும் போவோம்..."
எல்லாரும் கம்பாலை பிடித்து இழுத்தனர்.
"கடலம்மா ஐலசா...கண்திறப்பாள் லோவே...
கண்திறந்து ஐலசா... மீன் தருவாள் லொவே..
மீன் தருவாள் ஐலசா... மடி நிறைப்பாள் லொவே..
மடி நிறைத்து ஐலசா... மனம் நிறைபாள் லோவே...
மனம் நிறைத்து ஐலசா... வளம் கொழிப்பாள் லோவே...
வளம் கொழித்து ஐலசா...வாழ்வு தந்தாள் லோவே...
வாழ்வு தந்தால் ஐலசா... மரியன்னை லொவே...
மரியன்னை ஐலசா..."
ஐலசா பாடி மடியை இழுத்தோம். மடி கரையில் வந்து சேர்ந்தது.
"மடி ஏரறட்டே... மீன் படட்டே...
மடிக்காரன் பொண்டாட்டி...தள வரட்டே..."
"வேளா பட்டா...வேளங்கேக்கும்...
வேளா பட்டா...சங்கடம் தீரும்...
குதுப்பு பட்டா... கொமுரு எறங்கும்..."
மடிய எந்த பீத்தையும் இல்லாம கரையில இழுத்து போட்டச்சு...
பெருவாரியான வேளா... இன்னைக்கு முழுக்க எடுத்தாலும் முடியாது போல இருக்கு...
நீங்க மட்டும் இல்லேன்னாஅ எங்க மடி இழுக்க முடியாம பெளந்து போயிருக்கும்... அந்த ஆண்டவனா பாத்து தான் ஒங்கள அனுப்பி வச்சாரு.
..ஒங்க பங்க கணக்கு பார்த்து உங்க ஊருக்கு குடுத்துவிடுதோம்..."மடிக்காரன் என் கையைப்பிடித்து க்ண்ணீர் விட்டார்.
"அவனுக்க கல்யாண ராசிய பாத்தையா? என்னோட வந்தவனுங்க கிண்டலடிச்சாங்க...
"சரி... சரி...கெளம்புங்க...
கொட்டுகாறா...உடாத அடி..."
ஆங்காங்கே உக்காந்து ஓய்வு
எடுத்தவங்களும்...மடிப்பெட்டிய தெறந்து வெத்தலை... போட்ட மூப்பில்களும்,
குழந்தைகளுக்கு பால் கொடுத்த பச்சபிள்ளகாரிகளும் எழுந்து வந்து, கல்யாண
ஊர்வலத்துல சேந்துகிட்டாங்க.
பொழுது விடிஞ்சு சூரியன் முதுகுல அடிச்சு சூடு கெளப்புற வெயிலில பெண்ணோட ஊருக்கு வந்து சேர்ந்தோம்.
கொட்டு மேளத்தோட வாற் எங்க கல்யாண ஊர்வலத்தையும்... மாப்பிள்ளையையும் பாக்க மக்களெல்லாம் கூடிட்டாஙக..
''பொண்ணு தெரியுமா... போனமாசம் கொழந்த எறக்குனதுனால குருசு
புடிச்சி...கல்யாணம் நடந்துச்சே...அவளுக்கு கூட்டுகாரி மத்தவளக்கும்
பெண்ணு..."
" அப்பிடியா... பேய்ச்சட்டையும் பேய்முள்ளும் போட்டு தெருத்தெருவா அடிச்சு கொண்டுபோனாங்களே ...அவளா...?"
" அவ இல்ல... இது அவளுக்க கூட்டுகாறி.... இவதான் அவங்களுக்கு உள்ளா இருந்தாளாம்..."
யாரோ கூட்டத்துல கொளுத்திப்போட்ட வெடி வெடிச்சு யாரு மூலமோ என் அம்மாவின் காதுக்கு வந்து சேர்ந்திருக்கு...
"மக்களே... இந்த கலியாணம் வேண்டாம்.... திருச்சிப்போவோம்... நம்ம குடும்பம் மானமுள்ள குடும்பம்..."அம்மா கத்தினார்.
"என்னம்மா என்ன விசயம்..."
நான் படபடப்போடு அம்மாவைக் கேட்டேன்.
"அதுவா... இந்த ஊருல குருசு புடுச்சு கரியாணம் பண்ணுனவளுக கூட்டுகாறியாம்
இந்த பொன்ணு... இவ எப்பிடியோ...இப்பவாவது விசயம் தெரிஞ்சதே...
கெளம்புங்க...கெளம்புங்க..."
அம்மா விரட்டிக் கொண்டிருந்தார்.
"குருசு புடிச்சா..."ன்னு சொன்னாலே அந்த பொண்ணு எப்பிடிப்பட்டவன்னு
தெரிஞ்சிக்கலாம். அதுக்குமேல யாரும் ஞாயம் பேசமுடியாது இருந்தாலும்.
"அவ கூட்டுகாறி குருசு புடிச்சதுக்கு இந்த பொண்ணு என்னம்மா செய்வா...."
நான் தைரியம்மக கேட்டேன்.
"இவதான் அவுங்கள உட்டு குடுத்தாளாம்.... இவளுக வீட்டுலதான் அவுங்கள கண்டு புடுச்சாவாம்..."அம்மா பொரிந்து தள்ளினார்
பொழுது விடிஞ்சு சூரியன் முதுகுல அடிச்சு சூடு கெளப்புற வெயிலில பெண்ணோட ஊருக்கு வந்து சேர்ந்தோம்.
கொட்டு மேளத்தோட வாற் எங்க கல்யாண ஊர்வலத்தையும்... மாப்பிள்ளையையும் பாக்க மக்களெல்லாம் கூடிட்டாஙக..
''பொண்ணு தெரியுமா... போனமாசம் கொழந்த எறக்குனதுனால குருசு
புடிச்சி...கல்யாணம் நடந்துச்சே...அவளுக்கு கூட்டுகாரி மத்தவளக்கும்
பெண்ணு..."
எங்க ஊருல கல்யாணத்துக்கு முன்னால
தவறிப்போறவங்களுக்கும், கொழந்த உண்டாகிறவங்களுக்கும், கொழந்த
அழிக்கிறவங்களுக்கும் ஒரு தண்டனை உண்டு. அவுங்கள ஞாயிற்றுக்கிழமை பூசையில்
நடுக்கோயிலுல உக்கார வச்சு ஒரு பெரிய 'குருசை' கையில குடுத்து
முட்டாங்கால்ல இருந்து பூசை முடியிறதுவரை புடிக்க வைப்பாங்க... இப்படி மூணு
ஞாயிற்றுக்கிழமை பூசையிலயும் அந்த கெட்டுப்போன பெண்ணு குருசு புடிக்கணும்.
அதுக்குப்பிறகு எந்த ஆடம்பரமுமில்லாம சாமியாரு தாலிய ஓதி கல்யாணம்
கட்டிவைப்பாரு .... அது மட்டுமில்லாம அந்த பெண்ணுக்கு
பேய்ச்சட்டையும்,பேய்முள்ளும் உடுத்தி ஊர்க்காரங்க கம்பால அடிச்சு
தெருத்தெருவா கொண்டுவருவாங்க. இதனால எந்த தப்பு தண்டாவும் ஊருல நடக்காம
இருந்தது.
"தண்டனை சரிதான்.... ஆனா தண்டன பெண்ணுக்கு மட்டும்தான்... அந்த தப்புக்கு காரணமான ஆம்பிள்ளைக்கு...? நான் பலதடவ கேட்டிருக்கேன்.
"அவன் ஆம்பள..ஆம்பள..
கொளம் கண்ட எடத்துல குளிப்பான்...
பூ கண்ட இடத்துல சூடுவன்" இந்த பதில்தான் கிடைக்கும்.
"அதுக்காக எந்த தப்பும் செய்யாத இந்த பெண்ணுக்கு
இப்படி ஒரு தண்டணையா? கல்யாண அண்ணைக்கு மாப்பிள்ள தாலிகட்டாம போனா அந்த
பொண்ணோட கதி என்னன்னு நெனச்சு பாத்தீங்களா?" நான் கேட்டது தான் தாமதம்.
"அப்படியா சங்கதி... அப்ப இவனுக்கும் அந்த பெண்ணுக்கும் ஏதோ பழக்கம்
இருக்கும்போல...இவங்களையும் குருசு புடிச்சு வச்சாதான் சரியாகும்...?" எங்க
ஊரு மூப்பில்மாரு கதையை வேரு பாதையில் திருப்பினார்கள்.என்னால். வேறு
எதுவும் பேச முடியல்ல...
"மண்டைக்கு வந்தது மயிரோட போச்சு...தலை தப்புனது
தம்புறான் புண்ணியம்...போவோம் அவுங்க சிறீதனமா குடுத்த பணத்த அரவாசிபொட்டு
அவுங்க மூஞ்சியில உட்டு எறியலாம்..."
எல்லோரும் திரும்பி நடந்தனர்.
பட்டுசேலை கட்டி, கல்யாண கோலத்துல சிங்காரிச்சு வச்ச
கல்யாணப்பொண்ணு சன்னல் ஓரமா என்னைப்பார்த்து மள...மள....ன்னு கண்ணீர்
வடிப்பதை பார்த்துக்கோண்டே, கையாலாகாதவனாக நானும் திரும்பி நடந்தேன்...என்
கையில் இருந்த பூமாலையில் உள்ள பூவும் கல்யாணப்பெண்ணின் கண்ணீர் துளிபோல
ஒவ்வொண்ணா விழுந்துகிட்டிருக்கு. .. ..
குறும்பனை சி. பெர்லின்
0 comments:
Post a Comment