காதல் ஒரு ஹார்மோன் மாற்றம் என்பது உண்மையானால், அந்த ஹார்மோன் தான் காதல் கடவுள். - ஷ்ரதா.


காதல்!

உலகில் உள்ள அனைவராலும் நேசிக்கப்பட்ட உலக பொதுமொழி.

        இன்று உலகில் பிறந்த அனைத்து உயிரினங்களும் காதல் வயப்பட்டிருக்கும். மனிதர்கள் சற்று அதிகமாக காதலை உணருபவர்கள் அவ்வளவுதான்.

     காதல் ஒரு ஹார்மோன் மாற்றம் என்பது உண்மையானால், அந்த ஹார்மோன் தான் காதல் கடவுள்.

      நாம் நிணைத்துக்கொண்டிருப்பதை விட மிகவும் மேலானது காதல். காதல் என்றாலே ஒரு சிறு இனிய அதிர்வாவது எந்த வயதினருக்கும் ஏற்படும்.

        காதலுக்காக ஒரு நாள் என ஒதுக்குவதால் அன்று மட்டும் காதலிக்கலாம் என்றில்லை. தினமும் காதலித்துகொண்டிருக்கிறோம், நம் பணியை, நம் குடும்பத்தை. நம் வீட்டை, நம் நாட்டை.

       காதலர் தினம் என ஒரு நாள் ஒதுக்கி அன்று மேலும் சிறப்பாக நம் காதலை வெளிப்படுத்துவதில் தவறில்லை.

       ஆனால் அதே சமயம் காதல் என்ற பெயரில் 8 ஆம் வகுப்பு மாணவிக்கு 11 ஆம் வகுப்பு மாணவன் ஒரு பென்சிலையும், பேனாவையும், ஒரு ரோஜாவையும் பள்ளிக்கு போகும் வழியில் பார்த்து கொடுத்தவுடன், அப்பெண் அவனுடன் இருசக்கர வாகனத்தில் துப்பட்டாவை மூடிக்கொண்டு ஏறி உட்கார்ந்து பள்ளிக்கு எதிர்திசையில் செல்கையில், ஒரு ஆசிரியையாக என் மனம் வருந்தியது.

        நாம் பள்ளி பருவத்திலேயே நம் குழந்தைகளுக்கு பாலியல் கல்வியும், இனக்கவர்ச்சி குறித்தும், காதலை குறித்தும் ஒரு புரிதலை ஏற்படுத்தினால் வருங்கால சமுதாயம் ஒரு தெளிந்த நீரோடையாக மாறி வாழ்வில் வெற்றி பெறுவார்கள்.

      ”பாலியல் கல்வி குறித்த பாடதிட்டம்” என்பதை கொண்டு வருவது குறித்து அரசியல் தீர்மானிக்கட்டும். ஆனால் தற்போதைய வேளையில் நம் மாணவ மாணவிகளுடன் பாடத்தை தாண்டியும் நட்புறவுடன் பழகி அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது நம் அத்தியாவசிய கடமை ஆகும். எனவே காலம் தாழ்த்தாமல் நம்மால் முடிந்த வரை பாலியல் கல்வி மற்றும் காதல் குறித்த மிக நாசூக்கான புரிதலை நம் குழந்தைகளுக்கு எடுத்து வைக்கவும்.

          காதல் உரிய வயதில் வருவது இயற்கை. அது ஒன்றும் தவறில்லை. ஆனால் அதே சமயம் அதை வெளிப்படுத்த நாம் நம் வாழ்வை தற்சார்பு உடையவர்களாக மாற்றிக்கொண்டு நம் சொந்த காலில் நின்று வாழ்வை எதிர்கொள்ள முதலில் பழகிகொள்ள வேண்டும். பிறகு காதலை வெளிப்படுத்துங்கள் அல்லது காதலை அங்கீகரியுங்கள். உண்மையான காதல் எப்போதும் மறையாது. எனவே காலம் கணியும் வரை பொறுத்திருங்கள். உரிய வயதில் காதலை வெளிப்படுத்தியதும், உங்கள் முடிவை பெற்றோருக்கு தைரியமாக எடுத்துரையுங்கள். உங்கள் காதலினால் உங்கள் வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ள இருக்கும் பிரச்சினைகள் குறித்து பட்டியலிட்டு அதை நீங்கள் சமாளிக்கப்போகும் வழிகள் குறித்து முழுவதுமாக பேசுங்கள். ஏற்றுக்கொள்ளாவிட்டால் ஒருசில வருடங்களாவது முடிந்தவரை போராடுங்கள். அதைவிட்டு தயவு செய்து பெற்றவர்களுக்கு துரோகம் செய்து விடாதீர்கள்.

     உங்கள் பெற்றோரும் அவர்களின் வாழ்வில் நிச்சயம் காதல் வயப்பட்டிருக்கலாம்.

       எனவே காதல் புனிதமானது – என்ற எண்ணம் உங்களுக்கு மட்டும் இல்லை. உங்கள் பெற்றோருக்கும் உண்டு. தயவுசெய்து காதலை வெறுக்க வைத்து விடாதீர்கள். உங்கள் பெற்றோரை ஒதுக்கி காதலை மட்டும் சுயநலத்துடன் நீங்கள் ஏற்றுக்கொள்வதாக இருந்தால் உங்கள் முயற்சியில் வேண்டுமானால் நீங்கள் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் காதல் இறந்துவிடும். எனவே காதலியுங்கள். உண்ணதமான காதலை அனுபவியுங்கள். உரிய வயதில் உங்கள் காதலை வெளிப்படுத்தி உங்களையும், உங்களை சுற்றியுள்ளவர்களையும் சம்மதிக்க வைத்து உங்கள் காதலில் வெற்றி பெறுங்கள். உங்களுடன் காதலும் வெற்றி பெறும்.

      17 வயதில் காதல் வயப்பட்டு 23 வயதில் ஆசிாியையாக பணியில் சேர்ந்து 24 வயதில் காதலை வெளிப்படுத்தி, பெற்றோர் அங்கீரிக்க போராடி 26 வயதில் திருமனம் செய்த நான் இன்று குடும்பத்துடன் மிகவும் சந்தோசமாகவும், சமூகத்தில் கௌரவமான நிலையிலும் வாழ்ந்து வருகிறேன். எனது உறவினர்கள் என்னை முன்மாதிரியாக தங்கள் பிள்ளைகளிடம் கூறுகிறார்கள் என என் பெற்றோர் கூறி பெருமை படுகின்றனர். நான் காதலிக்கிறேன். என் கணவரை மட்டும் இல்லை. எனது பெற்றோரையும்.

எனது காதல் என்றும் புனிதமானது.
   
          - ஷ்ரதா. 
   (முதுகலை பட்டதாரி ஆசிரியை. தேனி மாவட்டம்.)

2 comments:

  1. I AM SO HAPPY TO READ THIS,U GAVE A GOOD MESSAGE TO THE SOCIETY.............................

    ReplyDelete
  2. உங்கள் மனதைரியம் பாராட்டிகுரியது.

    ReplyDelete