1. பற்றாக்குறை அதிகரிப்பும் ரூபாயின் வீழ்ச்சியும்!
இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைவதை 18 மாதங்களாக மெளன சாமியாராகப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்துவதற்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை குறைக்கப் போவதாக ஆகஸ்ட் 12-ம் தேதி அறிவிக்கிறார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
2012 ஜனவரியில் ரூ.45 கொடுத்து ஒரு டாலரை இந்தியர்களால் வாங்க முடிந்தது. ஆனால், ஆகஸ்ட் 12-ல் ஒரு டாலர் வாங்க ரூ.61 கொடுக்க வேண்டியிருந்தது. 2012
ஜனவரியில் இருந்து தற்போது வரை டாலரின் மதிப்பு 35 சதவீதம் உயர்ந்தது. அது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியில் பிரதிபலித்தது.
ஆனால், அவர் அறிவித்த 36 மணி நேரத்துக்குள்ளாக ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ந்தது. டாலருக்கு ரூ.61.50
கொடுக்க வேண்டியிருந்தது. இந்தியாவிலிருந்து டாலர் வெளியேறுவதைத் தடுக்க வெளிநாடுகளில் முதலீடு செய்வதையும், பணம் செலுத்துவதையும் கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு இந்திய ரிசர்வ் வங்கி தள்ளப்பட்டது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையும் கைகொடுக்கவில்லை.
ரூபாய் மதிப்பு வீழ்ந்து வந்த நிலையில், உண்மையிலேயே ரூபாயின் மதிப்பு - அதாவது அதன் வாங்கும் சக்தி- டாலருக்கு வெறும் ரூ.19.75தான் என்று
"தி எகனாமிஸ்ட்' (2.1.2013) குறிப்பிட்டது. அதாவது ரூபாயின் இன்றைய சந்தை மதிப்பில் மூன்றில் ஒரு பங்குதான் அதன் நிஜமான மதிப்பு!
சர்வதேச சந்தையில் தகுதிக்கும் மிகக் குறைவாக மதிப்பிடப்படும் கரன்சி இந்திய ரூபாய்தான் என்றும்
"தி எகனாமிஸ்ட்' குறிப்பிட்டது. உண்மையிலேயே அதிக மதிப்புடைய, ஆனால் குறைத்து மதிப்பிடப்பட்ட ரூபாயின் மதிப்பு ஏன் குறைந்து வருகிறது? இதற்கு யார் பொறுப்பு?
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு
2004-இல் பதவி ஏற்றபோது, இந்தியப் பொருளாதாரம் வலுவாகவும், வளர்ச்சிப் பாதையிலும் இருந்தது. நிதியமைச்சராகப் பொறுப்பேற்றபோது, வலுவான பொருளாதார நிலையையே தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு விட்டுச் சென்றது என்று ப.சிதம்பரமே ஒப்புக் கொண்டுள்ளார்.
2004 ஜூலையில் அவரது பட்ஜெட் உரையில்,
"இந்தியாவின் பொருளாதார அடிப்படை வலுவாகவே காணப்படுகிறது. ஏற்றுமதியைவிட இறக்குமதி கூடுதலாக இருந்தால் ஏற்படும் பற்றாக்குறை நிலையும் இந்தியாவுக்கு சாதகமாகவே உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த நிலை மாறி,
1991-ம் ஆண்டில் காணப்பட்ட இருண்ட பொருளாதார நிலை ஏற்பட்டிருப்பதற்கு யார் காரணம்?
2004-ல் முந்தைய ஆட்சி விட்டுச் சென்ற வளமான பொருளாதாரத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எப்படி சீரழித்தது?
நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் பாய்ச்சல்
2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்றதில் இருந்து பொருளாதாரம் மோசமானது எப்படி,
2009-ல் மீண்டும் அதே அரசு ஆட்சிக்கு வந்ததும் பொருளாதாரம் எப்படி சீரழிந்தது என்பதை சில புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே புரியும். நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் அண்மைக்கால வரலாற்றைப் பார்ப்போம்.
1991-2001 காலகட்டத்தில் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 35 பில்லியன் (ஒரு பில்லியன் -
100 கோடி) டாலராக இருந்தது. அதாவது 3,500 கோடி டாலர். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது நடப்புக் கணக்கு பற்றாக்குறை உபரியாக மாறியது. உபரி -ஆம், உபரிதான்- அதுவும். 22
பில்லியன் டாலராக இருந்தது. 1978-க்குப் பிறகு நடப்புக் கணக்கு உபரி என்பது அதுவே முதல்முறை.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது உபரியாக இருந்த நடப்புக் கணக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 9 ஆண்டு ஆட்சியில், ப.சிதம்பரம் (ஐந்தரை ஆண்டுகள்), பிரணாப் முகர்ஜியின் (மூன்றரை ஆண்டுகள்) தலைமையில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவுக்கு 339
பில்லியன் டாலராக அதிகரித்தது. அவர்களது பொருளாதாரத் தலைமையின் கீழ் உபரி எவ்வாறு, ஏன் பற்றாக்குறையாக ஆனது?
2003-2004 இல்
13.5 பில்லியன் டாலரை நடப்புக் கணக்கு உபரியாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒப்படைத்தது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை
2004-05இல் 2.7 பில்லியன் டாலராகவும், 2-வது மற்றும் 3-வது ஆண்டுகளில் மூன்று மடங்காக அதாவது 10 பில்லியன் டாலராகவும் உயர்ந்தது. பின்னர், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 16 பில்லியன் டாலராகவும் (4-வது ஆண்டு), 28 பில்லியன் டாலராகவும் (5-வது ஆண்டு), 38 பில்லியன் டாலராகவும் (6-வது ஆண்டு), 48 பில்லியன் டாலராகவும் (7-வது ஆண்டு), 78 பில்லியன் டாலராகவும் (8-வது ஆண்டு), 89 பில்லியன் டாலராகவும் (9-வது ஆண்டு) அதிகரித்தது.
கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றை அதிகமாக இறக்குமதி செய்வதே நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிக்கக் காரணம் என அரசு திரும்பத் திரும்பக் கூறியது. இப்போதும் கூறி வருகிறது. இதுதான் காரணமா, இதுதான் முழு உண்மையா என்றால் நிச்சயமாக இல்லை.
உற்பத்தியை அழித்த இறக்குமதி
இறக்குமதி புள்ளிவிவரங்களை ஆய்வு செய்வதால் அதிர்ச்சிகரமான உண்மைகள் புலப்படுகின்றன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மூலதனப் பொருள்களின் இறக்குமதி விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. பொதுவாகச் சொல்வதென்றால் இது யாராலும் கவனிக்கப்படாததாகி (அல்லது மறைக்கப்பட்டதாகி) விட்டது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது மூலதனப் பொருள்களின் இறக்குமதி சராசரியாக ஆண்டுக்கு 10 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே
(2004-05) மூலதனப் பொருள்களின் இறக்குமதி 25.5 பில்லியன் டாலராக ஆனது. அதன் பின்னர் ஒவ்வோர் ஆண்டும் மூலதனப் பொருள்களின் இறக்குமதி அதிகரித்தது.
2-வது ஆண்டில் 38 பில்லியன் டாலராகவும், 3-வது ஆண்டில் 47 பில்லியன் டாலராகவும், 4-வது ஆண்டில் 70 பில்லியன் டாலராகவும், 5-வது ஆண்டில் 72 பில்லியன் டாலராகவும், 6-வது ஆண்டில் 66 பில்லியன் டாலராகவும், 7-வது ஆண்டில் 79 பில்லியன் டாலராகவும், 8-வது ஆண்டில் 99 பில்லியன் டாலராகவும், 9-வது ஆண்டில்
91.5 பில்லியன் டாலராகவும் அதிகரித்தது. 9 ஆண்டுகளில் மொத்தம் 587 பில்லியன் டாலருக்கு மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
மூலதனப் பொருள்களின் இறக்குமதி
"செயல்படும்' பொருளாதாரத்துக்கான அறிகுறி. தத்துவரீதியாக, அது தேசிய உற்பத்தியை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், என்ன ஆனது என்பதைப் பார்ப்போம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் முதல் 4 ஆண்டுகளில் தொழில் துறை உற்பத்திக் குறியீடு ஆண்டுதோறும் சராசரியாக
11.5 சதவீதமாக இருந்தது. ஆனால், இது படிப்படியாகக் குறைந்து அடுத்த 5 ஆண்டுகளில் 5 சதவீதத்துக்கும் கீழே போனது. கடைசியாக
2012-13 இல் 2.9 சதவீதமாக ஆனது. 4 ஆண்டுகளில் மூலதனப் பொருள் இறக்குமதி அதிகரிப்பதற்கேற்ப தொழில் துறை உற்பத்தி அதிகரிக்காமல்
11.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக 56 சதவீத சரிவைக் கண்டது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் 9 ஆண்டுகளில் 587
பில்லியன் டாலருக்கு மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. கடைசி 5 ஆண்டுகளில் 407
பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இது மொத்தத்தில் 79 சதவீதமாகும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் முதல் 4 ஆண்டுகளில் சராசரியாக 45 பில்லியன் டாலருக்கும், பிந்தைய 5 ஆண்டுகளில் 80 பில்லியன் டாலருக்கும் மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
79 சதவீதம் அதிகரிப்பு
மூலதனப் பொருள் இறக்குமதி 79 சதவீதம் அதிகரித்தபோதும், தேசிய உற்பத்தி 56 சதவீதம் வீழ்ச்சியடைந்தது மட்டுமல்ல அதிர்ச்சி. தொடர்ந்து உற்பத்தி குறைவதையும், இறக்குமதி அதிகரிப்பதையும் பிரதமரும், நிதியமைச்சரும், ரிசர்வ் வங்கியும், பொருளாதார ஆலோசகர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என்பதுதான் அதிர்ச்சி.
நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (கரண்ட் அக்கௌண்ட் டெபிசிட்) என்றால் என்ன?
நாம் அன்னியச் செலாவணி கொடுத்து இறக்குமதி செய்யும் மொத்தத் தொகைக்கும், ஏற்றுமதி மூலம் கிடைக்கும் அன்னியச் செலாவணிக்கும் உள்ள இடைவெளிதான் நடப்புக் கணக்கு உபரி அல்லது பற்றாக்குறை. ஏற்றுமதி அதிகமாக இருந்தால் உபரியும், இறக்குமதி அதிகமாக இருந்தால் பற்றாக்குறையும் ஏற்படும். அளவுக்கு மீறிய பற்றாக்குறை ஏற்படும்போது அது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும்.
மூலதனப் பொருள்களின் இறக்குமதி என்றால் என்ன?
ஒரு தயாரிப்பாளர் ஏதாவது ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்காக மூலப்பொருளை இறக்குமதி செய்வதுதான் மூலதனப் பொருள் இறக்குமதி.
அப்படி மூலப்பொருளை இறக்குமதி செய்து புதிய பொருள்களைத் தயாரித்து அதிக விலைக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் இறக்குமதியால் ஏற்படும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை ஈடுகட்ட முடியும்.
2. கச்சா எண்ணெய், தங்கம் மட்டுமே காரணமல்ல!
எப்படி நடப்புக் கணக்கில் உபரி பற்றாக்குறையானது என்பதையும், இறக்குமதி அதிகரித்து உற்பத்தி குறைந்தது என்பதையும் ஆட்சியில் இருக்கும் பொருளாதார மேதைகள் வேடிக்கை பார்த்தார்கள் என்பதைப் பார்த்தோம். அதற்கு இவர்கள் சொன்ன சமாதானம், சர்வதேச அளவில் காணப்பட்ட பொருளாதார மந்த நிலை.
தொழில் துறை உற்பத்தி குறைந்ததற்கு
2008-ல் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையைக் காரணமாகக் கூற முடியாது. ஏனென்றால், 2008-09இல் 6.7 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி 2009-10இல் 8.6 சதவீதமாகவும், 2010-11இல் 9.3
சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. மேலும், பொருளாதார மந்தநிலை முதலில் முதலீடுகளையும், பின்னரே உற்பத்தியையும் பாதிக்கும். முதலீடு சுருங்கிய பிறகுதான் உற்பத்தி வீழ்ச்சியடையும். ஆனால், இங்கு முதலீடு (மூலதனப் பொருள் இறக்குமதி) மூன்றில் இரண்டு பங்கு அதிகரித்தும், உற்பத்தி பாதிக்கும் கீழே குறைந்துவிட்டது. இது என்ன புதிர்?
பிந்தைய 5 ஆண்டுகளில், மூலதனப் பொருள்களின் அதிகரித்த இறக்குமதிதான் தேசிய உற்பத்தி வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. இறக்குமதி அதிகரித்ததால் உள்ளூர் மூலதனப் பொருள் தொழில் துறை சரிவைச் சந்தித்தது.
2009-10இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.6 சதவீதமாக அதிகரித்தபோதும், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லாமல் தொழில் துறை உற்பத்தி வெறும் 5.3
சதவீதம் அதிகரித்தது.
பின்னர் மூலதனப் பொருள் உற்பத்தி
2011-12இல் 4 சதவீதமும், 2012-13இல் 5.7 சதவீதமும் சரிவைக் கண்டது. மேலும், கடந்த 3 ஆண்டுகளில் இடைநிலைப் பொருள்களின் உற்பத்தியும் அதிகரிக்கவில்லை.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மூலதனப் பொருள் தொழில் துறையை, மூலதனப் பொருள் இறக்குமதி சுனாமி போல தாக்கிய நிலையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் இந்தியச் சந்தையில் வெள்ளமெனப் பாய்ந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது
(2001-04) வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களின் இறக்குமதி வெறும் 600
மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) டாலராக இருந்தது. ஆனால், 2004-05 முதல் 2012-13 வரை வெளிநாட்டுப் பொருள்களின் இறக்குமதி 8 மடங்கு அதிகரித்து சராசரியாக ஆண்டுக்கு 5.5
பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) டாலராக உயர்ந்தது.
இதே காலகட்டத்தில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.2
மடங்கு உயர்ந்தது. இது தயாரிக்கப்பட்ட பொருள்களின் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்குதான். 9 ஆண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், தயாரிக்கப்பட்ட பொருள்களின் இறக்குமதி 50 பில்லியன் டாலராக உயர்ந்தது. இது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் வெறும் 2.3
பில்லியன் டாலராக இருந்தது. மூலதனப் பொருள் இறக்குமதி தேசிய உற்பத்தியை அதிகரிப்பதற்குப் பதில் அழிக்கவே செய்தது. தேசிய உற்பத்தி அழிவுக்கு, தயாரிக்கப்பட்ட பொருள்களின் இறக்குமதியும் காரணமாக அமைந்தது.
உற்பத்தியை அழித்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை
வர்த்தக உபரி என்பது உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் என்பதும், வர்த்தகப் பற்றாக்குறை என்பது அதைக் குறைக்கும் என்பதும் அடிப்படைப் பொருளாதாரம் ஆகும். எனவே, வர்த்தகப் பற்றாக்குறையான நடப்புக் கணக்குப் பற்றாக்குறை விகிதம், அதே அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் குறைத்தது.
நடப்புக் கணக்குப் பற்றாக்குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியை
2007-08இல் 0.8 சதவீதமும், 1.5 சதவீதமும் (2008-09), 2.1 சதவீதமும் (2009-10), 1.4 சதவீதமும்
(2010-11), 2.6 சதவீதமும் (2011-12), 3.9 சதவீதமும் (2012-13) குறைத்துள்ளது. ஒரு கணக்குக்காக, நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை விலக்கிவிட்டால், இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி
2007-08இல் 10.8 சதவீதமாகவும் (9.3% அல்ல),
2008-09இல் 8.2 சதவீதமாகவும் (6.7% அல்ல),
2010-11இல் 10.7 சதவீதமாகவும் (8.6% அல்ல),
2011-12இல் 8.8 சதவீதமாகவும் (6.2% அல்ல),
2012-13இல் 8.9 சதவீதமாகவும் (5% அல்ல) இருந்திருக்கும்.
கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் இறக்குமதி நமது அன்னியச் செலாவணிக் கையிருப்பை ஓரளவுக்கு விழுங்கிவிட்டது என்பது உண்மைதான். ஆனால், மூலதனப் பொருள்களுக்கும் இவற்றுக்கும் அடிப்படையிலேயே வித்தியாசங்கள் உள்ளன.
சர்வதேச உற்பத்தியில் சுமார் 25 சதவீதத்திலிருந்து 33 சதவீதம் அளவு தங்கத்தை இந்தியர்கள் வாங்குகிறார்கள். இந்தியாவின் தேவையில் நான்கில் ஒரு பங்குதான் பெட்ரோலியப் பொருள்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மீதி நான்கில் மூன்று பங்கை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதை மறுப்பதற்கில்லை. அது மட்டுமே பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்பதை ஏற்பதற்கில்லை.
ஆனால், இப்போது இறக்குமதி செய்யப்படும் இதர வெளிநாட்டுப் பொருள்கள் பெரும்பாலானவை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. தேவையில்லாமல் இந்தியாவில் உற்பத்தியாகும் பொருள்களை மிக அதிகமாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய மன்மோகன் சிங் அரசு அனுமதித்ததால், உள்நாட்டு மூலதனப் பொருள் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவையும் குறைத்துவிட்டது.
கச்சா எண்ணெய், தங்கம் காரணமல்ல!
ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கு கச்சா எண்ணெயும், தங்கமும் மட்டுமே காரணமல்ல அல்லது ஓரளவே காரணம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 9 ஆண்டு கால ஆட்சியில் 402
பில்லியன் டாலருக்கு தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் போன்ற விலைமதிப்பற்ற கற்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
பார்ப்பதற்கு இது பெரிய தொகை போலத் தோன்றலாம். ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் 251
பில்லியன் டாலர் மதிப்புக்கு நகைப் பொருள்களும், விலைமதிப்பற்ற கற்களும் ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளன. அதாவது, இறக்குமதி செய்யப்பட்ட தங்கமும், வைரம் போன்ற கற்களும் ஆபரணங்களாக்கப்பட்டு ஏற்றுமதியும் செய்யப்பட்டிருக்கின்றன. இதைக் கழித்துவிட்டால் நிகரப் பற்றாக்குறை 9 ஆண்டுகளில் 151
பில்லியன் டாலர்தான்.
அதேபோல, 9 ஆண்டுகளில் பெட்ரோலிய பொருள்கள் 804
பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால், பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட 279
பில்லியன் டாலரை கழித்துவிட்டால் நிகரப் பற்றாக்குறை 525
பில்லியன் டாலர் ஆகும். இது 587 பில்லியன் டாலர் மூலதனப் பொருள் இறக்குமதியைவிடக் குறைவானதே ஆகும்.
கடந்த 5 ஆண்டுகளில் பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதியின் நிகர மதிப்பு 360
பில்லியன் டாலர். இதே காலகட்டத்தில் 407 பில்லியன் டாலர் அளவுக்கு மூலதனப் பொருள்களை இறக்குமதி செய்திருக்கிறோம். பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதி தவிர்க்க முடியாதது, சரி. மூலதனப் பொருள்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தி இருக்கலாமே, ஏன் செய்யவில்லை?
பின்விளைவுகளைப் பற்றி கொஞ்சமும் கவலையில்லாமல் மூலதனப் பொருள்களை இறக்குமதி செய்ததால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்து ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது என்றும், உள்ளூர் உற்பத்தியையும், மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் பாதித்தது என்றும் கூறுவதற்கு ஒரு ஞானி வேண்டுமா என்ன? சாதாரண மனிதனுக்குக்கூட தெரியும் இந்த உண்மை. பொருளாதார மேதைகளுக்குத் தெரியாதா என்ன?
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால் ஏற்படும் ஒரே ஒரு விளைவை மட்டும் பார்ப்போம். எண்ணெய் இறக்குமதிக்காக டாலரை வாங்குவதற்கு கூடுதலாகச் செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும், இந்தியா எண்ணெய்க்காக செலவழிக்கும் தொகையை ரூ.9,500
கோடி அதிகரிக்கச் செய்துவிடும். இப்போதைய ரூபாய் மதிப்பினால், இந்தியா எண்ணெய் இறக்குமதிக்காக ஆண்டுதோறும் கூடுதலாக ரூ.1.60
லட்சம் கோடி செலவழிக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
பொருளாதாரச் சீரழிவுக்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறை என்பது ஒரு காரணம் மட்டுமே. பத்தாண்டுகளாக பொருளாதாரம் தொடர்ந்து சீரழிந்ததற்கான மேலும் சில காரணங்களையும், புள்ளிவிவரங்களையும் அடுத்து பார்ப்போம்.
3. வரி விலக்கால் அதிகரித்த நிதிப் பற்றாக்குறை!
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 9 ஆண்டு கால ஆட்சியில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை தாறுமாறாக 339
பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) டாலர் அளவுக்கு உயர்ந்ததால் ரூபாயின் மதிப்பு வெகுவாகச் சரிந்தது என்பதில் சந்தேகமே இல்லை. ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்தது ஒரு காரணமாக இருந்தாலும், அது மட்டுமே காரணமல்ல. நிதிப் பற்றாக்குறையும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.
அரசுக்கு வரும் வருவாயைவிடக் கூடுதலாகச் செலவழிப்பதே நிதிப் பற்றாக்குறையாகும். இப்போது மிக அதிகமான நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும், அபரிமிதமான நிதிப் பற்றாக்குறையும் சேர்ந்து கொண்டபோது ரூபாயை மரணப் படுக்கையில் தள்ளி இருக்கிறது என்பதுதான் உண்மை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நிதிப் பற்றாக்குறை எந்த நிலையில், எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
கடந்த 9 ஆண்டுகளில் ரூ.27 லட்சம் கோடி நிதிப் பற்றாக்குறைக்கு அரசு ஆளாகியுள்ளது. அதில் கடந்த 5 ஆண்டு நிதிப் பற்றாக்குறை ரூ.22.66
லட்சம் கோடி. முதல் 4 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக ரூ.1.35 லட்சம் கோடி நிதிப் பற்றாக்குறையாக இருந்துள்ளது. அதுவே அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக ரூ.4.5
லட்சம் கோடியாக அதிகரித்தது.
2008-ல் சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது, பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துவதாகக் கூறி உற்பத்தி மற்றும் சுங்க வரியை மத்திய அரசு குறைத்ததன் காரணமாகவே நிதிப் பற்றாக்குறை 5 ஆண்டுகளில் சுமார் ரூ.23 லட்சம் கோடியாக அதிகரித்தது.
நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும், நிதிப் பற்றாக்குறையும் மட்டுமல்ல, கூடவே வருவாய்ப் பற்றாக்குறையும் சேர்ந்து கொண்டது. முதல் இரண்டு பற்றாக்குறைகளும் அரசின் கவனக் குறையாலும், நிதி நிர்வாகத் திறமையின்மையாலும் ஏற்பட்டவை என்றால், வருவாய்ப் பற்றாக்குறை என்பது அரசு தெரிந்தே செய்த தவறு. விவரமுள்ள எந்த அரசும், நிதியமைச்சரும் இந்தத் தவறைச் செய்ய மாட்டார்கள்.
வரிகள் குறைப்பு காரணமாக 5 ஆண்டுகளில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.16 லட்சம் கோடியாக எகிறியது. முதல் 4 ஆண்டுகளில் வருவாய்ப் பற்றாக்குறை
0.75 லட்சம் கோடியாக இருந்தது, அடுத்த 5 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கோடியாக உயர்ந்தது. இன்றைய பொருளாதார நெருக்கடிக்கும், ரூபாயின் மதிப்புச் சரிவுக்கும் இதுவும் ஒரு முக்கியமான காரணி.
2008-ல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட சில நடவடிக்கைகள் இப்போதும் சிறிதளவில் நடைமுறையில் உள்ளன. வரிகள் குறைப்பு என்பது நாட்டை கொள்ளையடித்தது என்பதுடன் மிக அதிகப்படியான நிதிப் பற்றாக்குறையையும், நடப்புக் கணக்குப் பற்றாக்குறையையும் உண்டாக்கி, ரூபாயின் மதிப்பைச் சரித்து, பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அதாவது, கார்ப்பரேட் நிறுவனங்கள் என்று சொல்லப்படுகின்றனவே, அவர்களுக்கு மட்டுமே உதவியது.
ரூ.30 லட்சம் கோடி வருவாய் இழப்பு
ஆண்டுதோறும் பட்ஜெட்டின் பிற்சேர்க்கையில் வருவாய் இழப்பு குறித்த அறிக்கை இடம்பெறுகிறது.
2006-07 முதல் மத்திய அரசு வரி விலக்கு அளித்ததன் விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. கடந்த 9 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அளித்த வரி விலக்கு ரூ.30 லட்சம் கோடி அளவுக்குச் சேர்ந்துள்ளது.
2008-ல் அறிவிக்கப்பட்ட பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் வரி விலக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.2.6
லட்சம் கோடியாக இருந்தது. ஊக்குவிப்பு நடவடிக்கைகள் காரணமாக, கடந்த 5 ஆண்டுகளில் வரி விலக்கு இரு மடங்காக உயர்ந்து ஆண்டுக்கு ரூ.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 9 ஆண்டுகால ஆட்சியில் நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்க்கப்படும் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.16 லட்சம் கோடியாகவும், வரி விலக்கு ரூ.25 லட்சம் கோடியாகவும் உள்ளது.
சர்வதேச அளவில் பொருளாதார நிலை தேக்கம் அடைந்ததால் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தேவையாக இருந்தன என்று காரணம் கூறப்பட்டது. அதாவது, கார்ப்பரேட் நிறுவனங்கள் சர்வதேசப் பொருளாதாரத் தேக்கத்தால் பாதிக்கப்பட்டு நஷ்டம் அடையாமல் காப்பாற்றுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் இது என்பது மன்மோகன் - சிதம்பரம் கூட்டணி முன்வைத்த வாதம்.
ஆனால், ஆச்சரியப்படத்தக்க வகையில், முன்பைவிட இந்த
"ஊக்குவிப்பு' காலகட்டத்தில்தான் பெரிய தொழில் நிறுவனங்களின் லாபம் அதிகரித்துள்ளது.
2005-06இல் பெரிய தொழில் நிறுவனங்களின் லாபம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11 சதவீதமாக இருந்தது. அப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் மிக அதிகமாக
(9.5%) இருந்தது. இதை அடிப்படையாகக் கொண்டோமானால், பெரிய தொழில் நிறுவனங்களின் லாபம்
12.94% (2006-07) ஆகவும், 14.26% (2007-08) ஆகவும்,
11.86% (2008-09) ஆகவும், 12.71% (2009-10) ஆகவும்,
12.15% (2010-11) ஆகவும் அதிகரித்துள்ளது.
2005-06ஐ ஒப்பிடும்போது கடந்த 5 ஆண்டுகளில் பெரிய தொழில் நிறுவனங்கள் ரூ.4.8
லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளன. பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளின் பயனில் பெரும் பகுதியை பெரிய தொழில் நிறுவனங்கள் விழுங்கிவிட்டன என்பதுதான் உண்மை. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்தியப் பொருளாதாரத்தை பலப்படுத்தவோ, பத்திரப்படுத்தவோ பயன்படாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொழிப்பதற்குத்தான் பயன்பட்டன.
அரசின் ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு முன் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் சராசரியாக 9 சதவீதமாக இருந்தது.
2008-09இல் 6.7 சதவீதமாகக் குறைந்தது. 2010-11 வரை சராசரியாக 9 சதவீதமாக இருந்தது. அதன் பின்னர்தான் குறையத் தொடங்கியது. மிகப் பெரிய அளவில் வரிவிலக்கு அளித்தது குறித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கையும் (பக்கம்
66-68) அதிருப்தி தெரிவித்துள்ளதுடன், வரி விலக்கு அளிப்பதைக் கட்டுப்படுத்துவதும் அவசியமானதே என ஆலோசனையும் வழங்கியுள்ளது.
வரி விலக்குகளைத் திரும்பப் பெறுவோம் என பிரதமர் மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும்
2005-லேயே உறுதி அளித்தனர். ஆனால், செய்யவில்லை. அப்போது அப்படிச் செய்யாததும், 2009-ல் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை நிறுத்தாததுமே தவறான பொருளாதார நடவடிக்கைகளாக ஆகிவிட்டன.
ஊக்குவிப்பு வரி விலக்கு காரணமாக நிதிப் பற்றாக்குறை ரூ.12 லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது. இதன் காரணமாகவும்
2011-12இல் பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்பட்டது.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல,
2014 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக உணவுப் பாதுகாப்பு மசோதாவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிவித்துள்ளது. மசோதா இப்போது மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
இதன் மூலம், ஆண்டுதோறும் நிதிப் பற்றாக்குறையில் மேலும் ரூ.2 லட்சம் கோடி உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. தேசமே திவாலானாலும் பரவாயில்லை, பின்விளைவுகளைப் பற்றிக் கவலை கொள்ளாமல் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பிலேயே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உள்ளது என்ற எண்ணம் வர்த்தகச் சந்தையில் தோன்றியுள்ளது. நிலைமை இப்படி இருந்தால் ரூபாயின் மதிப்பு ஏன் வீழ்ச்சி அடையாது? மேலும் பார்ப்போம்.
4. திவாலாகாமல் காப்பாற்றுவது எது?
ஊக்குவிப்பு நடவடிக்கை என்கிற பெயரில் அளிக்கப்பட்ட வரி விலக்கால் வருவாய் இழப்பு ஏற்பட்டு நிதிப் பற்றாக்குறை அதிகரித்தது என்பதுடன் நிற்கவில்லை.
வெறும் வருவாய் இழப்பைவிட மோசமான தீமையை ஊக்குவிப்பு நடவடிக்கை மறைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சுங்க வரி ஏற்கெனவே பாதியாகிவிட்டது. இந்நிலையில்,
2008இல் சுங்க வரி குறைக்கப்பட்டதன் மூலம் இறக்குமதிப் பொருள்கள் மலிவான விலைக்கு கிடைக்கின்றன. அதன் விளைவாக, கடந்த 5 ஆண்டுகளில்
(2008-09 முதல் 2012-13 வரை) மூலதனப் பொருள்கள் 407 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டன. அதற்கு முந்தைய 4 ஆண்டுகளில் 180
பில்லியன் டாலருக்குதான் மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
2007-08இல் ரூ.ஒரு லட்சம் கோடியாக இருந்த சுங்க வரி வசூல்,
2009-10இல் 0.83 லட்சம் கோடியாகக் குறைந்தது. அதேநேரத்தில், 2007-08இல் ரூ.8.4
லட்சம் கோடியாக இருந்த இறக்குமதி, 2009-10இல் ரூ.13.74 லட்சம் கோடியாக அதிகரித்தது. இறக்குமதி 56 சதவீதம் அதிகரித்த நிலையில், சுங்க வரி வசூலோ 17 சதவீதம் குறைந்தது.
2008இல் சுங்கம் மற்றும் உற்பத்தி வரியைக் குறைத்ததன் காரணமாக மூலதனப் பொருள்களின் இறக்குமதி வெள்ளமென அதிகரித்தது என்பது வெளிப்படை. ஏற்கெனவே கூறியது போல, உள்ளூர் மூலதனப் பொருள் உற்பத்தியை, மூலதனப் பொருள்களின் இறக்குமதி பாதித்ததுடன் உள்நாட்டு மொத்த உற்பத்தியையும் குறைத்தது.
வரி விலக்கானது நிதிப் பற்றாக்குறையை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தியதுடன் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையையும் அதிகரிக்கச் செய்து ரூபாயை மரணப் படுக்கையில் தள்ளியது.
இப்படி பொருளாதாரத்தை எல்லா வழிகளிலும் வரி விலக்கு பாதிப்புக்குள்ளாக்கியது. ஆனால், பொருளாதாரக் குழப்பங்கள் இத்துடன் முடிந்தனவா என்றால் முடியவில்லை.
கடனை அதிகரித்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை
2008-ம் ஆண்டு பட்ஜெட்டுக்கு பிந்தைய நிதிப் பற்றாக்குறைகள், பொதுக் கடன் தொகையில் ரூ.21.6
லட்சம் கோடி அதிகரித்தவேளையில், நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் அதிகரித்ததன் காரணமாக அதிக அளவில் வெளியிலிருந்து கடன் வாங்க நேரிட்டது. ஒரு வகையில் பார்த்தால் கந்து வட்டிக்குக் கடன் வாங்குவதுபோல என்று வைத்துக் கொள்ளுங்கள்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், இதற்கு முன்பு இல்லாத வகையில் இந்தியாவுக்கு அன்னிய நேரடி முதலீடு வந்த நிலையிலும் வெளியிலிருந்து கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டது என்பதுதான் வேதனை.
கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 205
பில்லியன் டாலர் அன்னிய நேரடி முதலீடு கிடைத்துள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்ட 102
பில்லியன் டாலரை கழித்தால்கூட இந்தியாவுக்கு நிகர மதிப்பாக 103
பில்லியன் டாலர் அன்னிய நேரடி முதலீடு வந்துள்ளது.
வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள நிகரத் தொகை 124
பில்லியன் டாலர்களாகும். இதனுடன் அன்னிய நேரடி முதலீட்டையும் சேர்த்தால் அன்னியச் செலாவணியாக 227
பில்லியன் டாலர் வந்துள்ளது. ஆயினும், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை தொகையான 339 பில்லியன் டாலரைவிட இது குறைவு. இதனால், வெளியிலிருந்து கடன் வாங்குவது தவிர்க்க முடியாததானது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் குறுகிய காலக் கடன்கள் 4 பில்லியன் டாலர்களிலிருந்து 70 பில்லியன் டாலர்களாக அதாவது 17 மடங்கு அதிகரித்தது. வெளிக் கடன்களோ 288
பில்லியன் டாலரில் இருந்து 396 பில்லியன் டாலராக அதிகரித்தது. அன்னிய முதலீடுகளும், கடன்களும் அதிகரித்ததன் காரணமாக முதலீடுகளுக்கும், கடன்களுக்கும் வருவாயிலிருந்து செலவிடப்படும் நிகரத் தொகை (வட்டி என்று வைத்துக் கொள்ளலாம்.) 4
பில்லியன் டாலரில் இருந்து 16.5 பில்லியன் டாலராக (4 மடங்கு) அதிகரித்தது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையானது (339 பில்லியன் டாலர்), முதலீட்டு வருவாயையும்
(227 பில்லியன் டாலர்), கூடுதல் கடனையும் (288 பில்லியன் டாலர்) பெருமளவு விழுங்கிவிடுவதால், அன்னியச் செலாவணி கையிருப்பு 180
பில்லியன் டாலரிலிருந்து 292 பில்லியன் டாலராக மட்டுமே அதிகரித்தது.
தொடர்ந்து இமய மலை அளவுக்கு அதிகரித்து வரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, அதிகரிக்கும் கடன்கள், கடன்கள் மற்றும் முதலீடுகளுக்கான வட்டி, பொருத்தமற்ற குறுகிய காலக் கடன்கள் உள்ள நிலையில், ஏட்டளவில் மட்டுமே உள்ள அன்னியச் செலாவணி கையிருப்பான 292
பில்லியன் டாலரானது, சர்வதேச அளவில், பெருமளவு நாம் திவாலாகி ரூபாய் மரணப் படுக்கையில் தள்ளப்பட்டதை வெளிப்படுத்தியது. அதனால், முதலீட்டாளர்கள் பயந்து பின்வாங்கத் தலைப்பட்டனர்.
கலாசாரமே காத்தது
இவ்வளவு மோசமான நிலையில் இந்தியாவின் நிதி நிலைமையும், பொறுப்பில்லாத நிதி நிர்வாகமும் இருந்தும் சோமாலியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளைப் போல இந்தியா திவாலாகவில்லையே, ஏன்? இன்றும் இந்தியப் பொருளாதாரம் தாக்குப் பிடிக்கிறதே, அது எப்படி?
இந்தியாவை உள்நாட்டு அளவிலும், சர்வதேச அளவிலும் திவாலாகும் நிலையில் இருந்து எது காப்பாற்றியது என்பது பொதுமக்கள் பார்வைக்குப் புலப்படவில்லை. நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க நிதி எங்கிருந்து வந்தது? வர்த்தக வங்கிகளுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் அரசு நிதியைப் பெற்றது. பாரம்பரியமாக இந்தியக் குடும்பங்கள், தங்கள் சேமிப்பை வங்கிகளில் இட்டுவைப்பதால் இந்தியாவுக்குள் அரசு கடன் பெற முடிந்தது.
ஓராண்டில் இந்தியர்கள் வங்கிகளில் சேமிக்கும் தொகை சுமார் ரூ.10 லட்சம் கோடியாகும். இதுவே உள்நாட்டு அளவில் திவாலாவதில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தைக் காத்தது. ஆனால், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை எப்படி சமாளிக்கப்பட்டது? இந்த விஷயத்தில் இதுவரை சொல்லப்படாத உண்மை அதிர்ச்சி தரத்தக்கதாகும்.
குடும்பச் செலவுகளுக்காக வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்கள் அனுப்பும் தொகையும், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து உள்ளூரில் எடுக்கப்படும் தொகையுமே சர்வதேச அளவில் திவாலாவதில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தைக் காத்து வருகிறது என்பதுதான் அந்த அதிர்ச்சி தரும் ஆச்சரியமான உண்மை.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 9 ஆண்டுகால ஆட்சியில் அன்னியச் செலாவணி கையிருப்புக்கு இந்தியக் குடும்பங்களின் பங்களிப்பு 335
பில்லியன் டாலர் ஆகும். இது கிட்டத்தட்ட நடப்புக் கணக்குப் பற்றாக்குறைக்கு சமமானதாகும்.
இந்தப் பணம் திருப்பத் தக்கதல்ல. இதற்கு வட்டியும் கிடையாது. இந்தியப் பொருளாதாரத்துக்கு வாழ்வாதாரமாக விளங்கும் இந்தத் தொகை, பொருளாதார கோட்பாடுகளாலோ, அரசின் கொள்கையினாலோ கிடைத்ததல்ல. பாரம்பரியம், கலாசாரம் மூலம் இந்தியப் பொருளாதாரத்துக்கு கிடைத்த பரிசு இது. நவீனகால தனி மனிதத்துவத்துக்கு எதிராகப் போராடி வரும் பாரம்பரிய ஒருங்கிணைந்த இந்தியக் குடும்பங்கள் இல்லாது போயிருந்தால் இந்தத் தொகை கிடைத்திருக்காது, இந்தியப் பொருளாதாரம் இன்னமும் திவாலாகாமல் காப்பாற்றப்பட்டிருக்கிறது.
தங்கள் உற்றார், உறவினர்களைப் பாதுகாக்க இந்தத் தொகையை வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனுப்பாமல் இருந்திருந்தால், இப்போது இந்தியப் பொருளாதாரத்துக்கு வாழ்வாதாரமாக உள்ள 335
பில்லியன் டாலர் வராமல் போயிருப்பது மட்டுமல்ல, வெளிநாடுவாழ் இந்தியர்களின் உற்றார், உறவினர்களைப் பாதுகாக்கவும் அரசு செலவழிக்க வேண்டியிருந்திருக்கும். பொருளாதாரத்துக்கு கலாசார ரீதியாக பாதுகாப்பு அளிக்கும் இந்த நடைமுறையை இந்திய அரசு நிர்வாகம் எப்போதாவது கவனித்திருக்கிறதா? உணர்ந்திருக்கிறதா?
உறவுமுறை சார்ந்த இந்திய சமூகம், உற்றார், உறவினர்களைப் பாதுகாப்பதை கலாசாரரீதியாக கட்டாயமாக்கி இருக்கிறது. மேற்கத்திய நாடுகள் போன்று ஒப்பந்த முறையில் வாழும் சமூகங்களில் இது சாத்தியமல்ல.
இருப்பினும், இந்தியக் குடும்ப அமைப்பையும், சமூகத்தையும் ஒப்பந்த அடிப்படையிலான சமூகமாக மாற்றுவதற்கு ஏற்ப சட்டங்களை அரசு வகுத்து வருகிறது. வெளிநாடுவாழ் இந்தியர்களின் இந்தப் பங்களிப்பு பற்றிய பிரக்ஞைகூட இல்லாமல் அரசு நிர்வாகம் இதைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளது. ஆனால், முதலீடுகள் வருவது பற்றித் தம்பட்டம் அடித்துக் கொள்கிறது.
இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராக நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை சாதுர்யமில்லாமலோ அல்லது அறியாமையினாலோ மத்திய அரசு எப்படிக் கையாள்கிறது என்பதை இனி பார்ப்போம். அரசின் நடவடிக்கைகள் இந்தியாவைப் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிநடத்தி வருகின்றன என்பது மட்டுமல்ல. இந்தியாவின் சுதந்திரத்திற்கும், சான்றாண்மைக்குமே அச்சுறுத்தலை ஏற்படுத்தி விட்டிருக்கின்றன.
5. இந்தியாவின் சந்தை சீனாவின் கையில்!
மிகப்பெரிய பொருளாதாரச் சறுக்கலை இந்தியா எதிர்கொள்ளும் இந்த நிலைமையிலும்கூட, நமது நாடு திவாலாகாமல் காப்பாற்றுவது இந்திய சமூகத்தின் குடும்ப அமைப்பும், நமது சேமிப்பு உணர்வும்தான் என்பதைப் பார்த்தோம். ஆட்சியாளர்களின் தவறான அணுகுமுறையும் பொறுப்பின்மையும் இந்தியாவின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மட்டுமல்ல, நமது பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகி விட்டிருக்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் மேற்பார்வையில்,
587 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூலதனப் பொருள்களால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மூன்றில் ஒரு பங்கு சரிந்தது. வேடிக்கை என்னவென்றால், இறக்குமதி செய்யப்பட்ட இந்த மூலதனப் பொருள்களில் பெரும்பாலானவற்றை இந்தியாவிலேயே தயாரிக்க முடியும் என்பதுதான். நாம் தயாரித்துக் கொண்டிருந்த பொருள்களேகூட இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டது.
சுங்கம் மற்றும் உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்ததன் காரணமாக 339
பில்லியன் டாலர் அளவுக்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்குப் பொருள் என்ன? அதே அளவுக்கு இந்தியா தனது வளத்தை இழந்திருக்கிறது என்பதுதானே?
இந்தியாவின் நஷ்டம் யாருக்கு லாபம்? இந்தியாவின் நட்பு நாடுகளாக இருக்கும் அமெரிக்காவோ, இங்கிலாந்தோ, ஜெர்மனியோ, ஜப்பானோ, பிரான்úஸா, ரஷியாவோ லாபம் அடையவில்லை. மாறாக லாபம் அடைந்திருக்கும் நாடு எது தெரியுமா? சீனா!
2006-07 முதல் ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவின் இறக்குமதியால் சீனாதான் மிகப் பெரிய அளவில் லாபம் அடைந்திருக்கிறது.
2006-07இல் இந்தியாவின் இறக்குமதியில் சீனாவின் பங்கு 13 சதவீதமாக இருந்தது. அதுவே
2011-12இல் 17 சதவீதமாக அதிகரித்தது. விளைவு, சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 2012-13 வரையிலான கடந்த 6 ஆண்டுகளில் 175 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதற்கு முழு முதற்காரணம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தவறான அணுகுமுறையும், நிதிநிர்வாகமும்தான்.
2001-02இல் சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை 1 பில்லியன் டாலராக இருந்தது. அதுவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் 3-வது ஆண்டில் 9 பில்லியன் டாலரானது. பின்னர், அதுவே 16 பில்லியன் டாலர் (4-வது ஆண்டு),
23 பில்லியன் டாலர் (5-வது ஆண்டு), 19 பில்லியன் டாலர் (6-வது ஆண்டு), 28 பில்லியன் டாலர் (7-வது ஆண்டு), 39 பில்லியன் டாலர் (8-வது ஆண்டு), 41 பில்லியன் டாலர் (9-வது ஆண்டு) என மொத்தம் 175 பில்லியன் டாலராக ஆகியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறையான 325 பில்லியன் டாலரில் இது 54 சதவீதமாகும்.
150 பில்லியன் டாலருக்கு அதிகமாக சீனாவில் இருந்து மட்டுமே மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள பொருள்களின் மதிப்பைவிட மூன்று மடங்கு மதிப்புள்ள பொருள்களை சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல்!
இந்தியாவின் சிறந்த நண்பனாக சீனா என்றுமே இருந்ததில்லை. சீனாவுடனான பனிப்போர் தொடர்கிறது. அருணாசலப் பிரதேசத்தின் மீது சீனா உரிமை கொண்டாடி வருகிறது. பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே அணைகளைக் கட்டி வருகிறது. அது மட்டுமல்ல, இந்திய எதிர்ப்பையே தனது தேசியவாதத்தின் உயிர்மூச்சாகக் கொண்டுள்ள பாகிஸ்தானின் நட்பு நாடாகவும் சீனா விளங்கிவருகிறது.
வெறும் நட்பு நாடாக மட்டுமல்லாமல், நம்பத்தகுந்த கூட்டாளியாக பாகிஸ்தானுக்கு பொருளாதார, ராணுவ, தொழில்நுட்ப உதவிகளை அளித்துவருகிறது சீனா. பாகிஸ்தானுக்காக அணுசக்தி கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. உருவாக்கிவருகிறது. பொருளாதார நலன் ஒரு பக்கம் இருந்தாலும், தான் நஷ்டமடைந்து சீனா லாபம் அடைய உதவுவது என்பது இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்கு உகந்ததாக இருக்க முடியாது. சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையான 175
பில்லியன் டாலர் (சுமார் ரூ.10 லட்சம் கோடி) என்பது, கடந்த 6 ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவப் பாதுகாப்புச் செலவினங்களுக்கு சமமானதாகும். அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கணிப்புப்படி, சீனா தனது பாதுகாப்புத் துறைக்கு ஆண்டுதோறும் 63 பில்லியன் டாலர் செலவழிக்கிறது. எனவே, இந்தியாவின் வர்த்தகம் சீன பாதுகாப்புத் துறையின் 3 ஆண்டு செலவினங்களை ஈடுகட்டுவதாக அமையும்.
மேலும், சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை இந்திய ரூபாயின் மதிப்பையும், பொருளாதாரத்தையும் பாதிப்பதுடன் நின்றுவிடுவதில்லை. இன்னொரு பக்கம் சீனப் பொருளாதாரத்தை வலுவாக்குகிறது. இது இந்தியாவின் புவியியல்சார்ந்த அரசியல் நலன்களுக்கு உகந்ததல்ல.
பொருளாதாரரீதியாகவும், புவியியல்சார்ந்த அரசியல்ரீதியாகவும் இந்தத் தவறை மத்திய அரசு ஏன், எப்படி இழைத்துவருகிறது? இதற்கு பதில் இல்லை.
சீனா தனது பொருள்களை கொண்டுவந்து இந்தியாவில் கொட்டுவதற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு பதிலாக, தனது நடவடிக்கைகளின் மூலம் சீனாவுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மறைமுகமாக உதவி வருகிறது. மெத்தப் படித்த மேதாவிகளின் தலைமையிலான இன்றைய அரசு, இதை அனுமதிக்கிறதா இல்லை இதுகூடத் தெரியாமல், இதைப் பற்றியெல்லாம் சிந்திக்கும் திறனில்லாமல் செயல்படுகிறதா என்று தெரியவில்லை.
ரொக்கச் செலாவணி நிலை வலுவாக இருப்பதால், மிகவும் குறைவான வட்டி விகிதம் அளித்து இந்திய இறக்குமதியாளர்களை ஈர்த்து பல பில்லியன் டாலர் அளவுக்கு தனது மூலதனப் பொருள்களை இந்தியாவுக்கு சீனா ஏற்றுமதி செய்துவருகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இன்னும் சற்று விழிப்புடன் இருந்திருந்தால் இந்தப் பேரழிவைத் தடுத்து நிறுத்தவோ, மட்டுப்படுத்தியிருக்கவோ முடியும்.
விழிப்புடன் இல்லாத இந்தியா
உலக வர்த்தக அமைப்பில் சீனா
2001இல் இடம்பெற்றது. அதற்கு முன்னரே, உலக வர்த்தக அமைப்பின் நிர்பந்தம் காரணமாக இந்தியா இறக்குமதி வரிகளை பெருமளவு குறைத்திருந்தது. 1990-ல் இந்தியாவில் இறக்குமதியை ஒட்டிய வரி 50 சதவீதமாக இருந்தது. அதுவே,
1990-களின் இறுதியில் 20 சதவீதமாகக் குறைந்தது. 1980-களில் இருந்தே சீனா தனது பொருள்களை கொண்டுபோய் உலகம் முழுவதும் கொட்டியது. கொட்டியது என்றால் அடக்க விலைக்கும் குறைவாகவே விற்றது.
இதுபோன்ற நடவடிக்கைகளைத் தடுக்க உலக வர்த்தக அமைப்பில் விதிமுறைகள் உள்ளன என்பதால், சீனப் பொருள்கள் குறித்து இதற்கு முந்தைய அரசுகள் மிகவும் தீவிர விழிப்புணர்வுடன் செயல்பட்டன. இந்தியாவில் பொருள்களைக் கொண்டு வந்து கொட்டுவதற்கு எதிரான நடவடிக்கைகளை நரசிம்ம ராவ் அரசு ஆட்சியில் இருந்த காலம் முதல் தொடர்ந்து இந்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வந்தது.
1995 முதல்
2001 வரை பொருள்களைக் கொண்டு வந்து கொட்டுவதற்கு எதிராக 248
வழக்குகள் இந்தியாவால் தொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக இந்தியாவைவிட அமெரிக்கா மட்டுமே அதிக வழக்குகளை
(255) தொடுத்திருந்தது. இந்தியா தொடுத்த வழக்குகளில் ஐந்தில் ஒரு பங்கு வழக்கு சீனாவுக்கு எதிரானதாகும்.
மன்மோகன் சிங் அரசு பதவி ஏற்றது முதல் நிலைமை தலைகீழாக மாறியது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் வேகமெடுத்த சீனப் பொருள்களின் இறக்குமதியும், இந்தியாவில் இறக்குமதி வரி குறைப்பும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தன. இந்தியாவில் வர்த்தகத்தையொட்டிய வரி விகிதம்
1990-ல் 50 சதவீதம் ஆக இருந்தது, 1998இல் 20% ஆகவும், 2006இல் 14% ஆகவும், 2007இல் 12% ஆகவும், 2008இல் 8% ஆகவும் குறைந்தது. வரிகள் குறைக்கப்பட்டதில்கூடத் தவறில்லை. என்ன இறக்குமதி செய்கிறோம், எதற்காகச் செய்கிறோம் என்கிற கண்காணிப்பு இருந்திருந்தால் நிலைமை கட்டுக்குள் இருந்திருக்கும். பொருள்களைக் கொண்டு வந்து கொட்டுவதற்கு எதிரான நடவடிக்கைகள் வேகம் பெறுவதற்குப் பதிலாக,
2008 முதல் தேக்கமடைந்தன என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் உண்மை.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது
2002இல் பொருள்களைக் கொண்டு வந்து கொட்டுவதற்கு எதிராக உலகம் முழுவதும் தொடரப்பட்ட வழக்குகளில் நான்கில் ஒரு பங்கு இந்தியாவினால் தொடரப்பட்டிருந்தது. அப்போது வர்த்தகத்தையொட்டிய வரிவிகிதம் 20%
ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர், தொடரப்படும் வழக்குகளின் சதவீதம் குறைந்தது. பொருள்களைக் கொண்டு வந்து இந்தியாவில் கொட்டுவதற்கு எதிரான நடவடிக்கைகள் வேகம் பெற்றிருக்க வேண்டிய காலகட்டத்தில்
(2009) தொடரப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 15 சதவீதமாகக் குறைந்தது.
இந்திய சந்தையைக் கைப்பற்றிய சீனா
இப்போது, மூலதனப் பொருள்களின் இறக்குமதியில் சீனாவின் பங்கு 25 சதவீதத்துக்கும் அதிகமாகும். துணிநூல் இழை, தயாரிக்கப்பட்ட துணிகளில்
50%, பருத்தி நூலிழை, துணிகளில் 75%, பட்டு நூலிழை, கச்சா பட்டில் 90%, ஆயத்த ஆடைகளில் 33%, சிந்தெடிக் நூலிழைகளில் 66%, ரசாயன, மருத்துவப் பொருள்களில் 33%, உர உற்பத்திப் பொருள்களில் 66%, தொழிற்சாலை உதிரி பாகங்களில் 17%, கணினி மென்பொருள்களில் 33%, உருக்கில்
25%, மின்னணு சாதனங்களில் 66%, சிமென்டில் 10%, உலோகப் பொருள்களில் 33% ஆகியன இந்தியாவின் இறக்குமதியில் சீனாவின் பங்கு ஆகும்.
இந்திய சந்தையை சீனா எவ்வாறு ஆக்கிரமித்துள்ளது என்பதை இந்தப் பட்டியல் எடுத்துக் காட்டுகிறது. இந்தியாவில் சீனா தனது பொருள்களைக் கொண்டு வந்து குவிக்கிறது என்பதில் ஒளிவுமறைவில்லை. இது குறித்து பத்திரிகளைகளும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளன.
"தி ஸ்டேட்ஸ்மேன்' இதழ் (18.5.2009)
இவ்வாறு எச்சரித்தது: "சீனா தனது பொருள்களை இந்தியாவில் குவிப்பதன் மூலம் இந்திய உள்ளூர் சந்தையையும், உற்பத்தியாளர்களையும் சீர்செய்ய முடியாத பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. இப்போதைய நடைமுறை தொடர்ந்தால் இந்தியத் தொழில் துறை விரைவில் காணாமல் போய்விடும்.'
6. என்னதான் தீர்வு?
பத்திரிகைகள், பொருளாதார நிபுணர்கள், பொறுப்புள்ள சில எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று பலரும் அதிகரித்துவரும் சீனாவின் இறக்குமதி பற்றியும், தேவையில்லாத மூலப்பொருள் இறக்குமதி அதிகரிப்பு பற்றியும், ஏற்றுமதி குறைவு மற்றும் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படுவது பற்றியும் எச்சரிக்கை செய்தவண்ணம் இருந்தும், அதைப்பற்றிய கவலையே இல்லாமல் நிதியமைச்சரும் பிரதமரும் இருந்தனர் என்பதுதான் இன்றைய சிக்கலுக்கு மிகப்பெரிய காரணம்.
"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானுங் கெடும்' என்பார் வள்ளுவப் பேராசான். ஆனால், இடிப்பார் இருந்தும், எச்சரிக்கைகள் பல தரப்பட்டும் அதை எல்லாம் சட்டையே செய்யாமல் தேசம் கொள்ளை போவதையும் இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படையே ஆட்டம் காண்பதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது மன்மோகன் சிங் அரசும் நிதியமைச்சகமும் என்பதுதான் வேதனை.
எல்லா தரப்பிலிருந்தும் விடுத்த பொது எச்சரிக்கைக்குப் பின்னர்தான், சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை 127
பில்லியன் டாலராக எகிறியது. 2006-07 முதல் சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையான 175 பில்லியன் டாலரில் இது 75 சதவீதமாகும். ஒன்று
"இவர்கள் என்ன சொல்வது, நாம் என்ன கேட்பது' என்கிற அகம்பாவ மனோபாவம் காரணமாக இருக்க முடியும். இல்லையென்றால், ஆட்சியாளர்களுக்குத் தெரிந்தே, அவர்களது ஆசியுடன்தான் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்று கருத வேண்டியிருக்கிறது.
சரி, இந்த அளவுக்கு சீனாவுடனான வர்த்தகத்தை அதிகரிக்க முற்பட்டோமே, அதைப் பயன்படுத்தி, சீனாவுடனான எல்லைத் தகராறு உள்பட அனைத்துத் தகராறுகளையும் தீர்த்துக் கொள்ளவும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெறுவதற்கு ஆதரவு திரட்டவும் சீனாவுடனான வர்த்தக உறவை இந்தியா பயன்படுத்திக் கொண்டதா என்றால் அதுவும் இல்லை. சீனா தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் இருக்கும் தெளிவின்மையையும், ராஜதந்திரரீதியாகவும், தொலைநோக்குச் சிந்தனையுள்ள தேசிய தலைமைப் பண்பிலும் தோல்வியுற்றதையே இது எடுத்துக்காட்டுகிறது.
வீண்ஜம்பம், நிர்வாகக் குளறுபடி
சர்வதேச அளவில் பொருளாதாரரீதியாக வளர்ந்து வரும் நாட்டை, உள்ளும்புறமும் வீண்ஜம்பம் பேசியே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு குழப்பி மோசமாக நிர்வகித்து வருகிறது.
2005-06, 2006-07இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.5 சதவீதத்தைத் தாண்டியதையும், நிதிப் பற்றாக்குறை குறைந்துவருவதையும், உலகம் முழுதும் உலா வந்த போலி கடன்கள் காரணமாக அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரித்துவருவதையும் கண்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் அகமகிழ்ந்து, தன்னிலை மறந்தனர். இந்த மதிமயக்கமான தருணத்தில், இறக்குமதிக்கும், இந்தியர்கள் அன்னிய முதலீடு செய்வதற்கும் கதவுகளை மத்திய அரசு திறந்துவிட்டது.
முதிர்ச்சியடைந்த தலைமையாக இருந்திருந்தால், நிதி மற்றும் வெளியுறவை நிலைப்படுத்த இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியிருப்பார்கள். வரிவிலக்கைத் திரும்பப் பெறவும், அன்னியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்க நம்பகமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கவும் அதுதான் சரியான தருணமாகும்.
2005 பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிவிலக்குத் திரும்பப் பெறப்படும் என பிரதமர் மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் எச்சரித்திருந்தனர். ஆனால், பட்ஜெட்டில் அதுபற்றி மெüனம் சாதித்தனர். அதன் காரணமாக வரிவிலக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.2.5
லட்சம் கோடியாகவே நீடித்தது.
இந்தியா ஏற்கெனவே வல்லரசாக ஆகிவிட்ட தோரணையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செயல்பட்டது.
2008இல் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டபோது, மத்திய அரசு தனது எல்லையைத் தாண்டி வரிவிலக்கை அதிகரித்தது. அதன் காரணமாக வருவாய் பாதிக்கப்பட்டதுடன் சீனாவும், மற்ற நாடுகளும் தங்களது மலிவான பொருள்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமிக்க வழிகோலப்பட்டது.
இந்தியாவின் பொருளாதாரப் பேரழிவு
2005-06 முதல் 2010-11 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தது. இதை ஆய்வு செய்து மட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால், இந்தப் பேரழிவு
2011-12இல் கட்டுப்படுத்த முடியாததாகிவிட்டது.
தீர்வுதான் என்ன?
இப்போது, இதற்கு தீர்வுதான் என்ன? முதலீடுகளுக்காக கையேந்துவதோ அல்லது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்வதுபோல வெளியிலிருந்து கடன் வாங்குவதோ இதற்குத் தீர்வல்ல. இது புற்றுநோய்ப் புண்ணுக்கு மருந்து தடவுவது போன்றது. அது வேதனையை சற்று மட்டுப்படுத்துமே தவிர நோயைக் குணப்படுத்திவிடாது. அப்படியெனில் என்ன செய்ய வேண்டும்?
முதலில், நிதிப் பற்றாக்குறையில் ஆண்டுதோறும் ரூ.2 லட்சம் கோடி கூடுதலாக சேரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பு மசோதாவை செயல்படுத்துவதை, இப்போதைய பொருளாதார நெருக்கடி தீரும் வரையில் ஒத்திவைப்பதாக அறிவிக்க வேண்டும்.
பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில் அரசு உண்மையான அக்கறையுடன் உள்ளது என்பதை இது உணர்த்தும். முதலீட்டாளர்களுக்கும், சர்வதேச நிதி நிறுவனங்களுக்கும் சற்று நம்பிக்கை ஏற்படும். அவசர அவசரமாக முதலீடுகளைத் திரும்பி எடுத்துக் கொண்டுபோக எத்தனிக்க மாட்டார்கள்.
அடுத்து, வரிவிலக்கு அளித்து, மறைத்து வைக்கப்பட்டுள்ள தங்கத்தை வெளிக்கொணர வேண்டும்.
ஆபரணம் செய்யப்படாமல் மறைத்து வைக்கப்பட்டுள்ள தங்கம் 3 ஆயிரம் டன் முதல் 6 ஆயிரம் டன் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இதை வெளிக் கொணரத் தகுந்த வட்டி விகிதத்துடன் தங்கத்தின் மீது கடன் பத்திரங்களை அரசு வெளியிட வேண்டும். இதன் மூலம் 200
பில்லியன் டாலர் கிடைக்கும்.
அதே அளவு தொகை அன்னியச் செலாவணி கையிருப்பும் சேர்ந்தால் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் எதிர்பாராதவகையில் இந்தியப் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்க இயலும்.
2012 பட்ஜெட்டில் இதைச் செயல்படுத்த அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மிகுந்த ஆர்வம் காட்டினார். ஆனால், அப்போது அண்ணா ஹசாரே தலைமையில் ஊழலுக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடியவர்கள், கருப்புப் பண முதலைகளுடன் தன்னையும் இணைத்துப் பேசுவார்களோ என அஞ்சியதால் அவர் இதைச் செய்யவில்லை. பிரணாப் முகர்ஜியின் புத்திசாலித்தனமான முடிவு அரசியல் காரணங்களால் நிறைவேற்றப்படாமல் போயிற்று.
இப்போது இதைச் செய்வதற்கான அரசியல் உறுதி அரசுக்கு இருக்கிறதா? இப்போது இதைச் செய்யவில்லை என்றால், வேறு வழியில்லாமல் இதுபோன்றோ அல்லது இதைவிடக் கடுமையான நடவடிக்கைகளையோ அரசு பின்னர் மேற்கொள்ள நேரிடும் என்பது மட்டும் உறுதி.
பொருளாதார நெருக்கடி நிலை தோன்றும் வகையில் இப்போதைய சூழ்நிலை உள்ளது. எனவே,
1991இல் செய்தது போல, எதிர்க்கட்சியினருடன் கலந்துபேசி கருத்தொற்றுமை அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள இதுதான் தகுந்த தருணம்.
எங்களுக்கு எல்லாம் தெரியும் என்கிற எண்ணத்தில், மக்களவைத் தேர்தலை மட்டுமே குறியாக வைத்து மன்மோகன் சிங் அரசு தொடர்ந்து செயல்படுமேயானால்,
"அறுவை சிகிச்சை வெற்றி; நோயாளி காலமானார்' என்பதுபோல இந்தியப் பொருளாதாரம் திவால் நிலைக்குத் தள்ளப்படும்!
By எஸ்.குருமூர்த்தி
நன்றி- தினமணி
YOURS VAAZHGA VALAMUDAN
B. SRINIVASAN.M.A.,M.Ed.,M.C.A.,
B. SRINIVASAN.M.A.,M.Ed.,M.C.A.,
GRADUATE TEACHER
GHS GANGALERI 635 122
KRISHNAGIRI - DT
CELL : 99943-94610
KRISHNAGIRI - DT
CELL : 99943-94610
0 comments:
Post a Comment